16.08.2013

ஆவணி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு


திருவனந்தபுரம்,: ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை கோயில் திறந்திருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக நாளை நடை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை மறுநாள் முதல் 21ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகளுடன், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த 5 நாட்களிலும் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்யலாம். 21ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக செப்டம்பர் 14ம் தேதி கோயில் நடை திறக்கப்படும்.