25.08.2013

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd9Rw93TO4mfr_sTTdNIT9Quzr3FHImqQHGP4HlorLqQD72vyR975DlaDl9IdfdMdCJENdonuLyfZ5EJVtUlfast95zdCPMcY1QlyZ7huMIX2EPLVxyu4V55iRdprLtWEJgTKdtXfSZA0/s1600/tiruchendur.JPG
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வரும் 26-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா வரும் 26-ம் தேதியன்று அதிகாலை கொடி யேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் திருக்கோயில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப் படுகிறது. மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இம்மாதம் 30-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆறாம் திருவிழாவன்று காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வரும். ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 8.45 மணிக்கு மேல் ஆறுமுகப்பெருமான் வெற்றி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சப்பரம் சேர்கிறது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 8ம் திரு விழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோவில் வந்தடைந்து அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று பகல் 12.00 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் வந்து சேர்கிறார். 9ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். தேரோட்டம் வரும் 4-ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.