27.02.2014

முக்தியை வழங்கும் மகாசிவராத்திரி


முக்தியை வழங்கும் மகாசிவராத்திரி

ஊழிக்காலம் எனப்படும் உலக முடிவு நாளில் பிரளயம் தோன்றியதால் உலகின் உயிர்கள் அனைத்தும் அழிந்து போயின. அந்த இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நோக்கி பூஜித்து அவரது அருளைப் பெற்றார்.

அந்த இரவில் விரதம் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் மோட்சமடைய வேண்டுமென பார்வதி தேவி, சிவபெருமானிடம் வரம் பெற்றார். அந்த இரவே சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மகாசிவராத்திரி தோன்றியதற்கு மற்றொரு புராணக் கதையும் கூறப்படுகிறது.

அதாவது மகாவிஷ்ணு, பிரம்மதேவர் இருவருக்கும் யார் பெரியவர் என்ற சர்ச்சை எழுந்தது. அவர்களுக்குள் மூண்ட இந்த சர்ச்சை போராக உருவெடுத்தது. பல நூறு ஆண்டுகளாக அவர்கள் போரிட்டு வந்ததால், உலக உயிர்கள் துன்பத்தில் துவண்டு வந்தன. இதனைக் கண்ட சிவபெருமான், இருவரது சர்ச்சையையும் போக்க திருவுளம் கொண்டார்.

அதன்படி ஒரு மாசி மாதத்து சதுர்த்தசியுடன் கூடிய அர்த்த ராத்திரியில் அக்னி பிழம்பாக பிரம்ம தேவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் காட்சி கொடுத்தார் சிவபெருமான். அந்த அக்னி ஜோதியைக் கண்டு இருவரும் வியப்படைந்தனர். அப்போது ஈசனின் அசரீரி ஒலித்தது. ‘இந்த ஜோதியின் அடியையும், முடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர்’ என்ற ஒலி கேட்டது.

இருவரும் அகமகிழ்ந்தனர். பிரம்மதேவர் அன்னப்பறவையாகவும், மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்தும் முடியையும், அடியையும் தேடிச் சென்றனர். இந்த சர்ச்சை முடிவுக்கு வந்ததும் அக்னி ஜோதியாய் நின்ற ஈசன், சிவலிங்கமாக இருவருக்கும் காட்சி கொடுத்தார். அன்றைய தினமே சிவராத்திரி என்று அழைக்கப்படுவதாகவும் கூற்று உள்ளது.

மேலும் பார்வதிதேவி ஒருமுறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை, தன் கையால் மூடினார். இதனால் உலகம் இருளில் மூழ்கி துவண்டது. அப்போது 11 உருத்திரர்கள் திருவிடைமருதூரை அடைந்து சிவபெருமானை வணங்கி வழிபட்டனர்.

அந்த காலமே சிவராத்திரி என்றும் போற்றப்படுகிறது. எப்படி இருப்பினும் மகா சிவராத்திரி தினமானது மகிமை நிறைந்த ஒரு விரத நாளாகும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், திரயோதசி தினத்தில் ஒரு பொழுது மட்டும் உண்டு, சதுர்த்தசியில் உபவாசம் இருந்து துயில் நீக்கி, நான்கு யாமங்களிலும் சிவபெருமானை வழிபட்டு, அடுத்த நாள் அடியார்களுக்கும், பிராமணர்களுக்கும் அன்னதானம் செய்து பாராயணம் பண்ணுதல் வேண்டும்.

மகா சிவராத்திரியின் சிறப்பு பற்றி திருநந்திதேவர் உபதேசம் செய்ய, சூரியன், முருகப்பெருமான், மன்மதன், இமயன், இந்திரன், சந்திரன், அக்னி, குபேரன் முதலானோர் இவ்விரதத்தை அனுஷ்டித்து பேறு பெற்றுள்ளனர். விஷ்ணு இவ்விரதத்தை கடைபிடித்து சக்ராயுதம் பெற்றதுடன், லட்சுமிதேவியையும் அடைந்தார்.

அதே போல் பிரம்மதேவர், இந்த விரதத்தால் சரஸ்வதிதேவியை பெறும் பாக்கியம் பெற்றார். இது தவிர ராஜசேகர பாண்டியன் இந்த தினத்திலே வெள்ளியம்பலத்திலே சிவபெருமானுக்கு நான்கு யாமமும், விசேஷ பூஜை செய்து, ஈசனை கால் மாறியாட செய்து பரமானந்தக் கடலில் திளைத்தார் என்று திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

மகாசிவராத்திரி விரதத்தை முறைப்படி அனுஷ்டிப்பவர்கள், நிச்சயமாக முக்தி அடைவார்கள். மேலும் இந்த விரதத்தை சரியாக கடைபிடிப்பவர்களுடைய சந்ததியினரில் 21 தலைமுறையினர் கூட நன்மையடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விரதத்தை 24 ஆண்டுகள் செய்ய வேண்டும்.

அல்லது 12 ஆண்டுகளாக தொடர்ந்து அனுஷ்டித்தல் வேண்டும். விரதத்தை மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் அமைந்த சிவ தலங்களுக்கு சென்று நான்கு சாமங்களிலும் வணங்கி அபிஷேகம், அர்ச்சனை செய்து மறுநாள் தீர்த்தமாடி இயன்றவரை அன்னதானம் செய்தல் வேண்டும்.

நான்கு சாம பூஜைகளும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கையும் இறைவன் பாதத்தில் சமர்ப்பிப்பதை குறிக்கின்றன. தற்போது மகாசிவராத்திரி என்றால் அன்றைய தினம் இரவு கண் விழித்து இருப்பது ஒன்றே நோக்கமாக பார்க்கப்படுகிறது.

அதன்காரணமாக பலரும் இறைவனை மறந்து, கண் விழிப்பதை மட்டுமே நோக்கமாக பாவித்து அரட்டை அடிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என்று பொழுதுபோக்கு அம்சங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் எந்த பலனும் கிடைக்காது என்பதை பக்தர்கள் உணர வேண்டும். நான்கு சாமங்களிலும் இறைவனை நினைத்தபடி அவன் நாமம் உச்சரித்தபடி கண் விழித்து விரதத்தை அனுஷ்டிப்பதே உண்மையான பலனை பெற்றுத்தரும்.