08.09.2013

கவலையெல்லாம் காணாமல் போக்கும் ஸ்ரீகணேசாஷ்டகம்


கணேசன் என்ற விநாயகன் விக்னமெல்லாம் தீர்த்து வைப்பான். முழு முதற் கடவுளான கணபதியை எந்த ஒரு செயல் துவங்கு முன்னரும், உளமாற வழிபட்டு ஆரம்பித்தால், அந்தச் செயல், எந்தத் தடையுமின்றி, எளிதாக மன நிறைவாக முழுமை பெறும். அரக்கர்களையும் வதைக்க முற்பட்ட ஈசனே, அவ்வாறு சென்றபோது தான் சென்ற தேரின் அச்சு முறிந்துபோக, அதன்பிறகு கணபதியை வழிபட்டு தன் செயலில் வெற்றி கண்டார் என்கிறது புராணம்.

அத்தகைய சிறப்புப் பெற்ற கணேசனை, விநாயகர் சதுர்த்தி நாளில் கொண்டாடி மகிழ்வோம். கீழ்க்காணும் ஸ்லோகங்களைச் சொல்லி அவனருளைப் பெறுவோம்; கவலைகள் ஏதுமில்லாமல், களிப்போடு வாழ்வோம்:

யதோனந்த ஸக்தேரனந்தாஸ்ச ஜீவா
யதோ நிர்குணாதப்ரமேயா குணாஸ்தே
யதோ பாதி ஸர்வம் த்ரிதாபேதபின்னம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:


அளவற்ற சக்தியுள்ள எம்பெருமானே, கணேசா, நமஸ்காரம். உன்னிடமிருந்துதான் அளவற்ற ஜீவர்கள் உண்டானார்கள். நிர்குணரான உன்னிடமிருந்துதான் அளவிற்கடங்காத குணங்கள் எல்லாம் உண்டாயின. உன் ஆற்றலால்தான் எல்லா உலகமும் முக்குணங்களாகப் பிரிவுகள் கொண்டு இயங்குகின்றன. இத்தகைய பெரு கீர்த்தி கொண்ட கணேசா நமஸ்காரம், எப்போதும் நமஸ்காரம்.

யதஸ்சாவிராஸீத் ஜகத் ஸர்வமேதத்
ததாப்ஜாஸனோ விஸ்வகோ விஸ்வகோப்தா
ததேந்த்ராதயோ தேவஸங்கா மனுஷ்யா:
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:


கணேசா, உன்னிடமிருந்துதான் எல்லா உலகமுமே உண்டானது. அதனால் நீ எங்கும் அப்படியே வியாபித்திருக்கிறாய். ஜீவராசிகளைப் படைப்பதற்காக பிரம்மனும் இந்திரனும் தேவர்களும் மனிதர்களும் உன்னிடமிருந்தே உருவானவர்கள். அத்தகைய பராக்கிரமம் கொண்ட கணேசா, நமஸ்காரம்.

யதோ வஹ்னிபானூ பவோ பூர்ஜலம் ச
யத: ஸாகராஸ்சந்த்ரமா வ்யோம வாயு:
யத: ஸ்தாவரா ஜங்கமா வ்ருக்ஷஸங்கா:
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:


கணேசா, உன்னிடமிருந்துதான் அக்கினி, சூரியன், ருத்ரன், பூமி, நீர் என எல்லாமும் உண்டாயின. உன்னிடமிருந்துதான் சமுத்திரங்களும் சந்திரனும் ஆகாசமும் வாயுவும் தோன்றின. அசையும் பொருட்களாயினும் சரி, அசையாப் பொருட்களாயினும் சரி, மரங்களும் காடுகளும் எல்லாமே உன்னால் உற்பத்தி செய்யப்பட்டவைதான். இத்தகைய பெருமை கொண்ட கணேசா, நமஸ்காரம்.

யதோ தானவா: கின்னரா யக்ஷஸங்கா
யதஸ் ஸாரணா வாரணா: ஸ்வாபதாஸ்ச
யத: பக்ஷிகீடா யதோ விருதஸ்ச
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:


கணேசா, உன்னிடமிருந்துதான் அசுரர்களும் கின்னரர்களும் யட்சர்களின் கூட்டங்களும் உண்டானார்கள். உன்னிடமிருந்துதான் சாரணர்களும் யானைகளும் கரடி, புலி முதலான பிராணிகளும் உண்டாயின. நீதான் பட்சிகள், புழுக்கள், செடி, கொடிகள் என்று எல்லாவற்றிற்கும் ஆதி கர்த்தா. இத்தகைய மேன்மை கொண்ட கணேசா, நமஸ்காரம்.

யதோ புத்திரஜ் ஞானநாஸோ முமுக்ஷோர்
யத: ஸம்பதோ பக்த ஸந்தோஷிகா: ஸ்யு:
யதோ விக்னநாஸோ யத: கார்யஸித்தி:
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:


கணேசா, மோட்சத்தை விரும்பும் பக்தர்கள் எல்லாம் உன் அருளால் அஞ்ஞானம் விலகி ஞானம் கொண்டவர்களாகிறார்கள். உன் அருட்பார்வையால் தான் பக்தர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் சம்பத்துகள் எல்லாம் உண்டாகின்றன. உன் ஆசி இருந்தால் எந்த இடையூறும் விலகி ஓடும். உன் கடைக்கண் பார்வை பட்டாலேயே எல்லாவகை காரியசித்தியும் ஏற்படும். இத்தகைய அருட்கொடையான உனக்கு நமஸ்காரம்.

யத: புத்ரஸம்பத் யதோ வாஞ்சிதார்த்தோ
யதோ பக்தவிக்னா: ததானேகரூபா:
யத: ஸோகமோஹௌ யத: காம ஏவம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:


கணேசா, உன் அருள் இருந்தால் இல்லாதோருக்கும் புத்திர சம்பத்து உண்டாகும். உன்னிடம் கோரிய பொருள் கிடைக்கும். அதேசமயம், பக்தியற்றவர்களுக்கு பலவிதமான இடையூறுகளை உருவாக்கி பின்னால் அவர்களையும் ஆட்கொள்ளும் பரிவு மிகுந்தவன் நீ. உன் பேரருளால் சோகம், மோகம், போகம் என்ற சலனங்கள் எல்லாம் விலகி தூய மனம் அமையும். இத்தகைய கீர்த்தி பெற்ற கணேசா, நமஸ்காரம்.

யதோனந்த ஸக்தி: ஸ ஸேஷோ பபூவ
தராதாரணே னேகரூபே ச ஸக்த:
யதோனேகதா ஸ்வர்கலோகா ஹி நானா
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:


கணேசா, உன்னிடமிருந்துதான் அளவற்ற சக்தி கொண்டவரும், பலவகைப்பட்ட பூமியை தரிக்கும் பேராற்றல் வாய்ந்தவருமான ஆதிசேஷன் உண்டானார். உன்னிடமிருந்துதான் பலவகையான சுவர்க்கம் முதலிய லோகங்களும் உண்டாயின. இத்தகைய அற்புத ஆற்றல் கொண்ட கணேசா, நமஸ்காரம்.

யதா வேதவேசோ விகுண்டா மனோபி:
ஸதா நேதி நேதீதி யத்தா க்ருணந்தி
பரப்ரம்ஹரூபம் சிதானந்த பூதம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:


கணேசா, உன்னிடமிருந்துதான் மனோவிருத்திகளாலும் அளவிட முடியாத வேதவாக்குகள் உண்டாகின்றன.  சித்தானந்த சொரூபமான, பரப்பிரம்ம வடிவமானவனே கணேசா உனக்கு நமஸ்காரம், என்றென்றும் எப்போதும் நமஸ்காரம்.

தன்னை உபாசிப்பவர்களுக்கு தான் என்னென்ன அருட்கொடைகளை வழங்க முடியும் என்று கணேசர் சொல்கிறார், தெரியுமா?

புனரூசே கணாதீஸ: ஸ்தோத்ரமேதத் படேந்நர:
த்ரிஸந்த்யம் த்ரிதினம் தஸ்ய ஸர்வம் கார்யம்
பவிஷ்யதி இந்த கணேசாஷ்டகத்தை யார் மூன்று தினம் காலை, பகல், மாலை மூன்று வேளைகளிலும், மனதாரப் பாராயணம் செய்கிறாரோ அவருக்கு எல்லா காரிய சித்திகளும் உண்டாகட்டும்.

யோ ஜபேததஷ்ட திவஸம் ஸ்லோகாஷ்டகமிதம்
ஸுபம்
அஷ்டவாரம் சதுர்த்யாம் து ஸோஷ்ட
ஸீத்தீரவாப்னுயாத்


யார் எட்டு நாட்களும், சதுர்த்தியன்று எட்டு முறையும் இந்த மங்களகரமான எட்டு ஸ்லோகங்களையும் பாராயணம் செய்கிறாரோ அவர் அஷ்ட சித்திகளையும் அடைவார்.

ய: படேன்மாஸ மாத்ரம் து தஸவாரம் தினே தினே
ஸ மோசயேத் பந்தகதம் ராஜவத்யம் ந ஸம்ஸய:
யார் ஒரு மாதம் தினந்தோறும் பத்துமுறை பாராயணம் செய்கிறாரோ, அவர் சிறையில் அகப்பட்டிருந்தாலும் ராஜ தண்டனை பெற்றிருந்தாலும் அவற்றிலிருந்து விடுபடும் சக்தி பெறுவார். இதில் சந்தேகமே இல்லை.
வித்யா காமோ லபேத் வித்யாம் புத்ரார்த்தீ
புத்ரமாப்னுயாத்
வாஞ்சிதான் லபதே ஸர்வானேகவிம்ஸதி வாரத:
யோ ஜயேத் பரயா பக்த்யா கஜானானபரோ நர:
ஏவமுக்த்வா ததோ தேவஸ் சாந்தர்த்தானம்
கத: ப்ரபு:


யார் பக்தியுடன் என்னை (கணபதியை) தியானம் செய்து கொண்டு தினமும் இருபத்தோரு முறை பாராயணம் செய்கிறாரோ அவர் எந்தக் கலையை விரும்பினாலும் அது கைவரப்பெறுவார். புத்திர பாக்கியம் கோரினால் அதையும் அடைவார். இவை மட்டுமல்ல, எந்த விருப்பத்தை என்முன் சமர்ப்பித்தாலும் அது எல்லாமும் அடையப் பெறுவர்.